Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

50 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்த விவசாய நிலத்தின் - பட்டா ரத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

முன்னறிவிப்பு செய்யாமல் நிலம், குடியிருப்பு பட்டாவை ரத்து செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு வட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சி, காளிநகர், திருக்கழுக்குன்றம், மேலேரிப்பாக்கம் பகுதிகளில் விவசாய நிலம், வீடுகளை அகற்றுவதற்கான அரசு நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலப்பாக்கம் ஊராட்சி, காளிநகர், திருக்கழுக்குன்றம், மேலேரிப்பாக்கம், நென்மேலி ஊராட்சி, கிழவேடு கிராமத்தில் சர்வே எண். 96/1 முதல் 96/21 வரை உள்ள நிலத்தில் விவசாயிகள் 50 ஆண்டு மேலாக பயிர் செய்தும், குடியிருந்தும் வருகின்றனர்.

18 விவசாயிகளுக்கு 1972-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டு பம்பு செட்டுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கி பயிர்க்கடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கடன் உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்று வந்தனர். இந்த நிலங்களில் பயிரிட்டு அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும், வழங்கப்பட்டுள்ள நிலப்பட்டாவைகாரணமின்றியும், முன்னறிவிப்பு செய்யாமலும் ரத்து செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

முன்னறிவிப்பு செய்யாமல் நிலம் மற்றும் குடியிருப்பு பட்டாவை ரத்து செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் மற்றும் வீடுகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரியவருகிறது.

இதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், சிஐடியுமாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x