Published : 12 Sep 2021 03:20 AM
Last Updated : 12 Sep 2021 03:20 AM

போதிய விலை இன்றி - விருதுநகரில் குப்பையில் கொட்டப்படும் தக்காளி :

விருதுநகர் யானைக்குழாய் தெரு அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள தக்காளிகள்.

விருதுநகர்

விருதுநகரில் போதிய விலை கிடைக்காமல் தக்காளி குப்பையில் கொட்டப்படுகிறது.

தற்போதைய பருவ நிலையில் நாட்டுத் தக்காளியை விட சந்தையில் பெங்களூரு தக்காளி, ஹைபிரிட் தக்காளி அதிகம் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.10-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால், தக்காளி சாலை ஓரத்திலும், குப்பைகளிலும் வியாபாரிகளால் கொட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயி மற்றும் வியாபாரியான கந்தசாமி கூறியதாவது: நாட்டுத் தக்காளி சாகுபடி குறைந்ததால், ஹைபிரிட் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஓசூர், உசிலம்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் ஹைபிரிட் தக்காளி வகைகள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.

இவை தமிழகத்தின் தேவையை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலும், பெங்களூரு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும் ஹைபிரிட் தக்காளிக்கான விலை குறைந் துள்ளது. சகனா, பாத்தியா, ஓவியா என பலர் பெயர்களில் ஹைபிரிட் தக்காளி சாகுபடி செய்யப்படுகின்றன. அதோடு, கம்பு ஊன்றி பந்தல் முறையில் சாகுபடியை மேற்கொள்வதால், ஒரு செடியிலிருந்து அதிகபட்சம் சுமார் 100 கிலோ வரை தக்காளி சாகுபடி செய்ய முடியும்.

உற்பத்தி அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்துள்ளது. ஹைபிரிட் வகை தக்காளிகளை 25 நாள்கள் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும். ஆனாலும், போதிய விலை இல்லாததால் வியாபாரிகள் மனமுடைந்து தக்காளிகளை குப்பையில் கொட்டி அழித்து வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x