Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும் : கனிமொழி எம்.பி. உறுதி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடியில் துறைமுகம் மற்றும் அதைச் சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் அதிக தொழிலாளர்களைக் கொண்ட நகரமாக தூத்துக்குடிவிளங்குகிறது. இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கை. தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 1997-ம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுமதி அளித்தது. மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது. அப்போது மத்தியதொழிலாளர் நலத்துறை இணையமைச்சராக இருந்த கொடிக்குனில் சுரேஷ் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். ஆனால், அதன்பின் கடந்த

7 ஆண்டுகளாக தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முட்செடிகள் வளர்ந்து புதர் காடாக மாறியது.

இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கனிமொழி எம்.பி . பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.120 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதி 1997-ம்ஆண்டு கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டுபணிகள் தொடங்கப்பட்டு, நின்றுவிட்டன.

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை தொடங்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் குபேந்தர் யாதவிடம் கோரிக்கை அளித்தோம். அவரும் பணிகளை தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார். எனவே, தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது” என்றார்.

இஎஸ்ஐ பிராந்திய துணை இயக்குநர் அருள்ராஜ், சிப்காட் திட்ட மேலாளர் லியோ வாஸ் உடனிருந்தனர். உலக எழுத்தறிவு தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு சானிடைசர், முகக்கவசங்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x