Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM
கலசப்பாக்கத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப் பட்டதையடுத்து, திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இந்த அறிவிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானதாக, கலசப்பாக்கத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கலசப்பாக்கத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங் காலமாக உள்ளது. இதற்காக சட்டப்பேரவையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அப்போதைய முதல்வர் பழனிசாமி, தற்போது பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலு ஆகியோர் கலசப்பாக்கத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
இதனிடையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், அரசுமகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் என நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தினார். அதன் பயனாக, கலசப்பாக்கத்தில் புதிதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என, தமிழக சட்டப்பேரவையில் நேற்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனை வரவேற்று தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.90 லட்சம் மதிப்பில் மின்சார வசதி மேம்படுத்துதல் மற்றும் முதலுதவி மருத்துவ மையங்கள், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.30 லட்சத்தில் வணிக வளாகம், படைவீடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடியில் புதிய திருமண மண்டபம், செங்கம் அடுத்த புதூர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடியில் புதிய திருமண மண்டபம், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் உட்பட 7 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குட முழுக்கு விழா நடத்தப்படும், ஆரணி அடுத்த ராந்தம் கொரட்டூரில் ஆதிகேசவ பெருமாள் கோயில் மற்றும் கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்கலம் போர் மன்னலிங்கேஸ்வரர் திருக் கோயிலில் புதிய திருத்தேர் செய்தல், பெரியகிளாம்பாடி ரேணுகாம்பாள் கோயில் மற்றும் எலத்தூர் சிவசுப்ரமணியசுவாமி கோயில் குளங்கள் சீரமைத்தல், தேசூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருப்பணிகள் செய்யப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சுற்றுலாத் துறை சார்பில், “ஜவ்வாதுமலையில் சுற்று சூழலுடன் கூடிய தங்குமிடங்கள், பூங்காக்கள், பல்வேறு சாகசவிளையாட்டுகளை ஏற்படுத்துதல், பீமன் நீர்வீழ்ச்சி பகுதியை மேம் படுத்துதல் மற்றும் ஜமுனாமரத்தூர் ஏரியில் புதிய படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும்” என அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளை வரவேற்று, ஜவ்வாதுமலை உட்பட பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கொண்டாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT