Published : 04 Sep 2021 03:17 AM
Last Updated : 04 Sep 2021 03:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்சொர்ணவாரி பருவத்தில் நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், 25 இடங் களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. tvmdpc.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 9-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப் பட்டது. இதுவரை 4,521 விவசாயிகள், 18,885 மெட்ரிக் டன் நெல்லை, விற்பனை செய்வதற்காக முன் பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி வரை 2,406 விவசாயிகளிடம் இருந்து 9,485 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் அறுவடை தொடர்வதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 20-ம் தேதி வரை செயல்படும். கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை உள்ள காலத்துக்கான இணையதள முன்பதிவு வரும் 6-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்படும்.
முன் பதிவு செய்வதில் சந்தேகம், அனுமதி படிவம் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும்போது ஏற்படும் கால தாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் இருந்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரின் 94872 62555, ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (வேளாண்மை) 93642 -20624, வேளாண்மை அலுவலரின் 99439-83897 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
முன்பதிவு செய்யும்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியில் நெல் மூட்டைகளை கொண்டு வர தவறினால் மீண்டும் முன்பதிவு செய்யப்படும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT