Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோயிலில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 23 டன் எடை கொண்ட யானை சிலையும், 12 டன் எடை கொண்ட குதிரை சிலையும் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் யானைமேல் அழகர் அய்யனார் கோயில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் கிராம மக்கள் சார்பில், கடந்த 2017-ல் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதில், அறநிலையத் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.29 லட்சம் மற்றும் பொதுமக்கள் சார்பில் திரட்டப்பட்ட நிதி என ரூ.3 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, முழுவதும் கருங்கற்களைக் கொண்டு 70 அடி நீளம், 36 அடி அகலம், 13 அடி உயரத்துடன் கலை நுட்பத்துடன் 32 தூண்கள் கொண்ட மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்படத்தின் முகப்பில் வைப்பதற்காக, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் 50 டன் எடை கொண்ட ஒரே கல்லைக் கொண்டு 23 டன் எடையில் யானை சிலையும், 30 டன் எடை கொண்ட ஒரே கல்லைக் கொண்டு 12 டன் எடையில் குதிரை சிலையும் வடிவமைக்கப்பட்டது. இதேபோல, கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் 2 விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், 4 அடி உயரத்தில் யானை பாகன் சிலையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த சிலைகள் நேற்று முன்தினம் மாலை ஒரத்தநாடு புதூருக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. பின்னர் மேள, தாளம், வாணவேடிக்கையுடன், கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து நேற்று காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் 2சிலைகளும் பீடத்தில் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 2 சிலைகளுக்கும் பட்டுத் துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிலைகளை வடித்த சிற்பி மணி அவரது சகோதரர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து ஆகியோரை கோயில் நிர்வாகத்தினர் பாராட்டி கவுரவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT