Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம்செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக நகரின் எல்லையில் இருந்து கோயிலுக்கு தனி புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு வந்து செல்வதற்கு ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. ஊருக்குள் செல்லும் இந்த வழிப்பாதையில்தான் அனைத்து வாகனங்களும் வந்து, செல்கின்றன. எனவே, மாற்றுப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வட பகுதியில் வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சியில் திருச்செந்தூர் நுழைவு வாயிலில் பாலம்உள்ளது. அந்தப் பாலத்தில் இருந்துகிழக்கு நோக்கி வளைந்து நேரடியாக கடற்கரை வழியாக கோயில் வளாகம் வரை செல்வதற்கு அணுகுசாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் மூலம் இடம் கணக்கீடு நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின் படிவிரைவில் இந்த சாலை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல தென் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் பேருந்து நிலையம் வழியாக கோயிலுக்கு வந்து செல்கின்றனர். எனவே, தென் பகுதியிலும் இதுபோல சாலை ஏற்பாடு செய்ய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள பக்தர்கள் அதிகமாக கூடும்போது கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் 5,000 வீடுகள் மற்றும் 350 ஹோட்டல்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்
சுதந்திரப்போராட்ட வீரர் வ. உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் செப்.5-ம் தேதி அரசு சார்பில்கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் இல்லத்தையும், அங்குள்ள நூலகத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். நூலகத்தில் உள்ள முக்கிய நூல்களையும் பார்வையிட்டார்.தொடர்ந்து, ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குசாலை செல்லும் சாலையில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பழைய கட்டிடங்கள் மற்றும் வ.உ.சி. வழக்கறிஞராக பணியாற்றிய ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்றமாகச் செயல்பட்ட தற்போதைய பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது, பழைய பள்ளி கட்டிடத்தை புனரமைத்து வ.உ.சி.யின் பெயரில் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினம் செப்.11-ல் கடைபிடிக்கப்படுவதையொட்டி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியற்றை ஆட்சியர் பார்வையிட்டார். வட்டாட்சியர்கள் அய்யப்பன், முத்து உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT