Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, இன்றுமுதல் (ஆக.30) அமராவதிபாளையத்தில் திருப்பூர் வார கால்நடை சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலம் பல்லடம் சாலை சந்தை வளாகத்தில் ஒட்டுமொத்த காய்கறி சந்தை, வாரச்சந்தை மற்றும் வார கால்நடை சந்தை ஆகியவை செயல்பட்டு வந்தன.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதிமுதல் வார கால்நடை சந்தை செயல்படாமல் இருந்து வருகிறது.
தற்போதுள்ள சூழலில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள்நடைபெறுவதாலும் அமராவதிபாளையத்தில் ஒதுக்கப்பட்ட காலியிடத்துக்கு வார கால்நடை சந்தை மாற்றப்பட்டு, ஆகஸ்ட் 30-ம்தேதி (இன்றுமுதல்) செயல்பட உள்ளது.
வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தை செயல்படும். சந்தைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலியிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி, கழிப்பிடம், குடிநீர்வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் குத்தகைதாரர் மேற்கொள்ள வேண்டும்.
சந்தையில் சேகரமாகும் கழிவு களை, குத்தகைதாரரே அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாளை தவிர, பிற நாட்களில் கால்நடை சந்தை செயல்படக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT