Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பின்னலாடை உற்பத்தி நகரமான திருப்பூரில் பல்வேறு நாட்டினர் வர்த்தகம் தொடர்பாக வந்து செல்கின்றனர். இதில் நைஜீரியா, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக தங்கி பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கதேச நாட்டிலும் கணிசமான அளவில் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு பின்னலாடை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும், திருப்பூரில் மும்மடங்கு ஊதியம் வழங்கப்படுவதாக தொழில் துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் கூடுதல் ஊதியம் கிடைப்பதால், வங்கதேசத்தில் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வந்து திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். திருப்பூரில் பணம் கொடுத்து போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைக்குச் சேருகின்றனர். இவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்கள் மூலமாக தங்கியுள்ள வங்கதேச நாட்டினரை திருப்பூர் மாநகர போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட குமரானந்தபுரம் அண்ணா வீதியில்வங்கதேச நாட்டினர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளர் கணேஷ், உதவி ஆய்வாளர் ரஜினி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த வி.அலாமின் (28), ஜி.ரோஹிம் மியா (22), ஏ.ரியாத் மோனி (21) ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி, அருகேயுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டினர் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், திருப்பூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘ ‘கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் வங்கதேச நாட்டின் பிறப்புச் சான்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கியிருந்துள்ளனர். இடையில் அடிக்கடி வங்கதேசம் சென்று வந்துள்ளனர்''என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT