Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த - விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் : ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன், கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்கச் செய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டு கோடை பருவத்தில் சோளம், மக்காச்சோளம், துவரை, பருத்தி, நிலக்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, கத்திரி பயிர்களுக்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையும், வாழை, மஞ்சள் பயிர்களுக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதியும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சோளத்துக்கு ரூ.249, மக்கச்சோளத்துக்கு ரூ.401, துவரைக்கு ரூ.341.90, பருத்திக்கு ரூ.547.69, நிலக்கடலைக்கு ரூ.535, தோட்டக்கலை பயிர்களான தக்காளிக்கு 1,212.78, கத்திரிக்கு ரூ.912.66, வாழைக்கு ரூ.2,573.74, மஞ்சளுக்கு ரூ.2,613.26-ம் கட்டண மாக செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நிலப்பட்டா, ஆதார் நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்துடன் உரிய தொகையை செலுத்தி பயிர் காப்பீட்டு செய்து இடர்பாடு ஏற்படும் காலத்தில் காப்பீடு தொகையை பெற்று பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு காரீப் பருவத்துக் கான துவரை, நிலக்கடலை, வாழை, மஞ்சள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், நிலக்கடலைக்கு ரூ.535, துவரைக்கு ரூ.342, மஞ்சளுக்கு ரூ.2,645, வாழைக்கு ரூ.2,605 செலுத்த வேண்டும். துவரை, நிலக்கடலைக்கு வரும் 31-ம் தேதியும், மஞ்சள், வாழைக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x