Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

ஓராண்டை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம் - அக்.2-ல் கன்னியாகுமரி - டெல்லி கோரிக்கை பேரணி தொடக்கம் : திருப்பூர் விவசாயிகள் மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் அறிவிப்பு

திருப்பூர்

டெல்லி விவசாயிகள் போராட்டம் வரும் நவ. 26-ம் தேதி ஓராண்டை எட்டுவதையொட்டி அக்.2-ம் தேதி கன்னியாகுமரி தொடங்கி டெல்லி வரை கோரிக்கை பேரணியைத் தொடங்கவுள்ளதாக, அகில இந்திய விவசாயத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவை சார்பில், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே நிழலிக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று மாநாடு நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சு.முத்துவிசுவநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் இரா.சண்முகசுந்தரம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், ராஜஸ்தான் மாநிலத்தின் ‘தண்ணீர் மனிதர்’ என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங், டெல்லி போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் யுத்வீர்சிங், பாரதிய கிசான் சங்கத் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுக்கி நஞ்சுண்டசாமி, தமிழக விவசாயச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் த.குருசாமி, ஆசாத் கிசான் சங்கர்ஸ் கமிட்டியின் ராஜ்விந்தர் சிங் கோல்டன் உட்பட அகில இந்திய விவசாயத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசும்போது, "நாங்கள் தமிழகத்துக்கு வந்த நோக்கம், கெயில், உயர் மின் கோபுரம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்காக போராட வும்தான். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மின் பிரச்சினை உள்ளது. கெயில் எரிவாயு குழாய் பதிப்பை, சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும். இங்கிருந்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 24-ம் தேதி (இன்று) நடைபெறும் விவசாயிகள் மாநாட்டுக்கு செல்கிறோம்" என்றார்.

டெல்லி போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் யுத்வீர்சிங் பேசும்போது, "மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாய உற்பத்தி பொருளுக்கான விலை நிர்ணயித்துக்காகவும் போராடுகிறோம். 1983-ம் ஆண்டு பாரதிய கிசான் சங்கத்தில், இப்பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடுதான் முதல் தலைவராக இருந்தார்.

விவசாயிகளின் எண்ணம், காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. வரும் நவம்பர் 26-ம் தேதி டெல்லி போராட்டம் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி, கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை பேரணி நடைபெற உள்ளது. அக். 2-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும். இதில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் வழிநெடுக பங்கேற்கிறார்கள்" என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் பேசும்போது, "விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் நிறுவனங்களுக்கு செல்கிறது. அவை மாசுப்பட்ட நீராக வெளியேறுகிறது. இது விவசாயத்தை முழுவதும் இல்லாமல் செய்துவிடும். நொய்யல், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து ஆறுகளும் மடிந்து கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் இயக்கமானது புதிய நாட்டை உருவாக்கும். அதானி, அம்பானிகளுக்கு எதிராக போராடுகிறோம். ஒரு கையை உயர்த்தி போராட்டத்திலும், மறு கையை விழிப்புணர்வுக்கும் விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசும்போது, "டெல்லியில் 9 மாதங்கள் தொடர்ச்சியாக போராடி, விவசாயிகளின் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்றுள்ளனர். தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவைக் கூட்டத்தின்படி, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் விவசாயிகளைத் திரட்டி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். வரும். அக்.2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து, டெல்லி வரை கோரிக்கை பேரணியைத் தொடங்க உள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x