Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM
தூத்துக்குடி அருகே உள்ள எஸ்.கைலாசபுரம் கிராம மக்கள் வழக்கறிஞர்கள் சந்தனசேகர், ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “எஸ்.கைலாசபுரத்தில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிமென்ட் ஆலை அமைக்க உரிமம் வழங்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி, காயலூரணி, நயினார்புரம், சில்லாநத்தம், டி.குமாரகிரி கிராம மக்கள் அளித்த மனுவில், “எங்கள் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர், அதன் ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில், “அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களையும் பாதுகாத்து சீர்படுத்த வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மழைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும். மீனவர், மீன்சார்பு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட பணப்பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சுடலைமணி, மாவட்டச் செயலாளர் வசந்தகுமார் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “ 7-வது ஊதியக்குழு முடிவின்படி கருங்குளம், சாத்தான்குளம்,உடன்குடி ஒன்றியங்களில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT