Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

மத்திய அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி - நகைக்கடை உரிமையாளர்கள் 2 மணி நேரம் போராட்டம் :

மத்திய அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி, வேலூர் மெயின் பஜாரில் முழக்கங்களை எழுப்பிய நகைக்கடை உரிமையாளர்கள். அடுத்த படம்: திருவண்ணாமலையில் உள்ள நகைக்கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருவண்ணாமலை

தங்க நகை விற்பனையில் எச்.யு.ஐ.டி பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கியதை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நகைக்கடை உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்க நகைகளில் ஹால்மார்க் கட்டாயம் என்பது என்ற நிலையில், மத்திய அரசு புதிதாக 6 இலக்கம் கொண்ட எச்.யு.ஐ.டி என்ற பதிவு எண்ணை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று காலை இரண்டரை மணி நேரம் எதிர்ப்பு போராட்டம் நடை பெற்றது.

வேலூர் மெயின் பஜாரில் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கடைகளின் முன்பாக உரிமையாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மாவட்டத்தில் உள்ள காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வேலூர் நகை மற்றும் அடகு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ருக்ஜி கே.ராஜேஷ் கூறும்போது, ‘‘ஹால்மார்க் முத்திரை வாங்க வேண்டும் என்பதை நாங்கள் வரவேற் கிறோம். அதேநேரம், நாங்கள் வாங்கி விற்கும் நகைக்கு எச்.யு.ஐ.டி என்ற பதிவு எண் கட்டாயம் பெற வேண்டும் என்பதை ஏற்கவில்லை. வேலூரில் இந்தப் போராட்டத்தில் சுமார் 225 நகைக்கடைகளின் உரிமையாளர்கள் பங்கேற் றனர்’’ என தெரிவித்தார்.

திருவண்ணாமலை

ஹால்மார்க் நகைகளுக்கு தனி அடையாள எண் கட்டாயம் என இந்திய தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து, தி.மலை மாவட்டத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் நேற்று 2 மணி நேரம் மூடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கூறும்போது, “ஹால்மார்க் நகைகளுக்கு தனி அடையாள எண் வழங்குவது என்பது சாத்தியமற்றது. நகை விற்பனையில் காலதாமதம் ஏற்படும். இதனால், நகை வணிகம் பாதிக்கும்” என்றனர். அப்போது, ஹால்மார்க் நகைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என முழக்க மிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x