Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM
கடலூரில் தடையை மீறி மீன்பிடித்த 4 படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி கடலூர் மாவட்டத்தில் விசைப்படகுகள் செயல்படுகின்றன. இதனால் கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்போர் காலை 5 மணிக்கு தங்கு தளத்திருந்து புறப்பட்டு கடலில் மீன்களைப் பிடித்துக் கொண்டு மாலை 6 மணிக்குள் தங்கு தளத்துக்கு வந்து விட வேண்டும். இதுதொடர்பாக கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவை தவறாது மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று (ஆகஸ்ட் 22) அதிகாலை 3 மணி வரை கடலில் மீன் பிடித்துக்கொண்டு கடலூர் மீ்னபிடி தங்கு தளத்திற்கு நான்கு படகுகள் திரும்பின. மீன்பிடி தங்கு தளத்தில் இரவு கண்காணிப்புப் பணியில் இருந்த கடலூர் கோட்டாட்சியர் அதிகமான் கவியரசு, கடலூர் டிஎஸ்பி கரிக்கால் பாரி சங்கர் ஆகியோர் மீன்வளத்துறை அதிகாரிகளை வரவழைத்து இந்த படகுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடலூர் முதுநகரைச் சேர்ந்த கமல் படகு, பதிவெண் இல்லாத பிஎஸ் யுவ என்ற பெயர் கொண்ட தைக்கால் தோணித்துறையை சேர்ந்த பிரசாத் மற்றும் சின்னதைக்காலை சேர்ந்த சுகுமார் ஆகியோர் பங்குதாரராக உள்ள படகு, பெரியக்குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி படகு, தேவனாம்பட்டினம் சீத்தாராமன் படகு என்று தெரியவந்தது. இந்த 4 படகுகளும் விதிமுறைகளை மீறியதாக உறுதி செய்யப்பட்டு படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் படகுகளுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT