Published : 18 Aug 2021 03:13 AM
Last Updated : 18 Aug 2021 03:13 AM
பல்லடத்தில் 11 டன்னுக்கு மேல் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் கோவை மாவட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, பல்லடம், காரணம்பேட்டை பகுதிகளில் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்லடம் போலீஸார் நடத்திய சோதனையில் லட்சுமி மில் பகுதியில் மைக்கேல் ரெக்ஸ் என்பவர் வாகனத்தில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் கரடிவாவி ராமசாமி கிடங்கு, லட்சுமி மில் ஒத்தக்காடு தோட்டம் ஆகிய பகுதிகளில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பது தெரியவந்தது. ரூ.6.7 லட்சம் மதிப்பிலான 11 ஆயிரத்து 166 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒரு சரக்கு வாகனம், 3 கார்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மைக்கேல் ரெக்ஸ், ஜான்சாகு, சிவக்குமார், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "பல்லடம், திருப்பூர் மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர், புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள். அவர்களை குறிவைத்துதான் வியாபாரம் செய்துள்ளனர். அவர்களும் அதிக விலைக்கு வாங்கி சுவைப்பதுதான், பெரிய பதுக்கலுக்கு முக்கியக் காரணம்" என்றனர்.
பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் கூறும்போது, "தற்போது 4 பேரை கைது செய்துள்ளோம். கோவை கணபதியை சேர்ந்த குணா என்பவர் தான் முக்கிய குற்றவாளி. அவரை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால்தான், இந்த அளவுக்கு புகையிலை பொருட்கள் எங்கிருந்து வந்தது என்பது தெரியவரும். அவர் உட்பட தலைமறைவாகியுள்ள மூவரை தேடி வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT