Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

கரோனா கட்டுப்பாடுகளால் கடைகள் அடைப்பு : வெறிச்சோடிய திருப்பூர் காதர்பேட்டை; கவலையில் வியாபாரிகள்

திருப்பூர்

கரோனா பரவலை தடுக்க, கடந்த 5-ம் தேதி காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதிக்கப்படும் என, ஆட்சியர் சு.வினீத் அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் திருந்தார்.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள், மாநகரில் 33 வணிக பகுதிகள்பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள்விற்பனை தவிர மற்ற அனைத்துகடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சில்லரை ஆடை விற்பனைகடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பாக காணப்படும் காதர்பேட்டை வெறிச்சோடி காணப்படுகிறது.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலமாக ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல, உள்நாட்டு ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டை. இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகள் செயல்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், ஆடைகளை பார்வையிட்டு ஆர்டர் கொடுத்து செல்வார்கள். மேலும், ஞாயிற்றுக்கிழமைதோறும் ஏராளமான தற்காலிக சில்லரை ஆடை விற்பனை கடைகளும் காதர்பேட்டை பகுதிகளில் செயல்படும். கரோனா கட்டுப்பாடுகளால், தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் மூடப்படுகின்றன.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, "வடமாநிலத் தொழிலாளர்களுக்காகவே காதர்பேட்டை பகுதிகளில் ஞாயிறுதோறும் தற்காலிக ஆடை கடைகளைஅமைத்து விற்பனை செய்து வந்தோம். தற்போது அவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்களும் சொந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள். இதனால்ஆடைகளை விற்பனை செய்ய முடியாமல் கவலையில் உள்ளோம். சில்லரை ஆடை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதால், காதர் பேட்டை முழுவதும் வெறிச்சோடியது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x