Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
கீழ்பவானி பாசனக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1937-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீழ்பவானி பாசனத் திட்டம் (எல்.பி.பி.) மூலமாக, 84 ஆண்டுகளாக திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் விவசாயம், குடிநீர் மற்றும் பல்லுயிர்ச்சூழல் ஆதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை மூலமாக சுமார் ரூ.709 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கீழ்பவானி பாசன கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல்லுயிர்ச்சூழலை காக்கும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே, அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சார்பிலான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே குட்டப்பாளையத்தில், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார்.
தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கம், சிறு, குறு விவசாயிகள் சங்கம், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விரிவாக்க குழு விவசாயிகள், நொய்யல் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்ட பயனாளிகள், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பாதுகாப்பு கூட்டமைப்பினர், கீழ்பவானி பாசனத்தில் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் காக்க கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரும் மக்கள் இயக்கம், பல்லுயிர் அறக்கட்டளை நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
பவானி சாகர் அணையில் இருந்து கடைமடை பகுதி வரை கீழ்பவானி பாசன கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, எல்.பி.பி. கான்கிரீட் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.709 கோடி நிதியில், கீழ்பவானி பாசன கால்வாயை முழுமையாக தூர்வாரி இருபுறமும் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவாக, திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கீழ்பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக, தமிழக முதல்வரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்வதாக விவசாயிகளிடம் அவர் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT