Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(42). இவர், திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப் பதாவது, "புள்ளாநேரி கிராமத்தில் எனக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. எனது பெரியப்பா மகன் வரதராஜ் என்பவரிடம் எனது தந்தை பெற்ற ரூ.90 ஆயிரம் கடன் பாக்கிக்காக எனக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை நான் வரதராஜியிடம் கொடுத்து வைத்திருந்தேன். எனது தந்தை பெற்ற கடன் தொகைக்கான வட்டியை மாதந் தோறும் வரதராஜியிடம் தவறாமல் செலுத்தியும் வந்தேன்.
இந்நிலையில், எனது வீட்டை வரதராஜ் அவரது அண்ணன் பாபு, அவரது மனைவி வனரோஜா ஆகியோரது பெயரில் போலி ஆவணம் தயாரித்து அவர்களது பெயருக்கு கிரையம் செய்துள்ளது எனக்கு தெரியவந்தது.
இது குறித்து வரதராஜ் மற்றும் பாபுவிடம் கேட்டபோது அவர்கள் ஒன்று சேர்ந்து என்னையும், எனது மனைவியையும் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி அந்த வீட்டுக்கு பூட்டுப்போட்டுவிட்டனர். காயமடைந்த நாங்கள் திருப்பத் தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினோம்.
எனது தந்தை பெற்ற ரூ.90 ஆயிரம் கடன் பாக்கிக்காக, பல லட்சம் மதிப்பிலான சொத்தை அபகரித்தது மட்டும் அல்லாமல் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் மனு மீது உரிய விசாரணை நடத்தி எங்கள் வீட்டை மீட்டுத் தர வேண்டும்’’. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்ற எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமிக்கு நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில், வீட்டை அபகரித்த வரதராஜ், பாபு, வனரோஜா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT