Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - மக்களை தேடி மருத்துவம் திட்டம் : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

தி.மலை மாவட்டம் வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. அருகில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி ஏழுமலை உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் தொடக்க விழா, திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்து பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, “கரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து, இந்த திட்டம், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் முதற்கட்டமாக 10,080 பேர் பயனடைவார்கள். மேலும், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, வெளியே வர முடியாமல் உள்ள மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.

கரோனா ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியதால், நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற முடியவில்லை. இதனால், 2 முறை தாக்கிய கரோனா அலைகளில் உயிரிழந்த 60 சதவீதம் பேர் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் மக்களின் உயிரை காப்பாற்றும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட ஏழை, எளிய மக்கள், மலைவாழ் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கி உட்கொண்டவர்கள் உட்பட பலரும் பயன்பெறலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை, 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன” என்றார். இதில், ஆட்சியர் பா.முருகேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசி ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x