Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM
தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 28-ம் தேதி ஆய்வு செய்தனர். ஆட்சியர் செந்தில் ராஜ், வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர். அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அடையாளம் காட்டினார். அதிகாரிகள் அந்த இடங்களை பார்வையிட்டு சென்றனர். அதன்பின் கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸ் தனது அலுவலகத்துக்கு சென்று அமர்ந்திருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த கொம்பையா (49) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (22)ஆகியோர் அங்கு வந்து, “நாங்கள்அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு இடத்தை எப்படி அருங்காட்சியகம் அமைக்க காட்டலாம்” எனக் கூறி கிராம நிர்வாக அலுவலரை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் வைகுண்டம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
வைகுண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொம்பையா மற்றும்மணிகண்டன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்துகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி வைகுண்டம் வட்டத்தில் பணியாற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் அனைவரும் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையே தலைமறைவான இருவரையும் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். சென்னையில் பதுங்கியிருந்த கொம்பையா மற்றும் மணிகண்டன் இருவரையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தானம் (40) என்பவரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று பணிக்கு திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT