Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

சுகாதார ஆய்வாளர் கடத்தல் விவகாரம் - கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை :

திருவாரூர்

மன்னார்குடியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் கடத்தப்பட்ட சம்பவத்தில், கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). சீர்காழியில் நகராட்சி சுகாதார ஆய்வாளராக உள்ளார்.

இவர் கடந்த 2-ம் தேதி சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து அலுவலகம் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, அவரை தாக்கியதுடன், கத்தியாலும் காலில் குத்தியுள்ளனர்.

பின்னர் அவரை அன்று இரவு மன்னார்குடி அருகே சவளக்காரன் என்னுமிடத்தில் கீழே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், ராஜேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரை கடத்தியது கூலிப்படை என்பதும், அவரை கடத்தச் சொன்ன நபர், கூலிப்படையினருக்கு கடத்தலுக்கு பேசியபடி பணம் தர மறுத்ததால், அவருடன் கூலிப்படையினர் செல்போனில் வாக்குவாதம் செய்ததும், அதன்பின், ராஜேந்திரனை சவளக்காரன் பகுதியில் கீழே இறக்கிவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், அந்த கூலிப்படை கும்பல், கடத்தச் சொன்ன நபர் ராஜேந்திரனின் உறவினர் எனக் கூறி, உறவினர் ஒருவரது புகைப்படத்தையும் அவரிடம் காட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சொத்துப் பிரச்சினையாக இருந்தாலும் கூலிப்படை வைத்து கடத்தும் அளவுக்கு முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ள சீர்காழி போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x