Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/திருவண்ணாமலை
ஆடிக் கிருத்திகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில்உள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், கோயிலுக்கு வெளியே நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையாக முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, முக்கிய முருகன் கோயில்களான வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோயில், மகாதேவமலை, திமிரி குமரக்கோட்டம், ஞானமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும், காவடி நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
அதேநேரம், கோயில்களில் ஆடிக் கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. கரோனா தடை உத்தரவு காரணமாக முக்கிய கோயில்கள் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், கோயிலுக்கு சற்று தொலைவில் பக்தர்கள் சூடம் ஏற்றிச்செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் காவடி எடுத்து வர தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் காவடி எடுத்துவர தடை இருந்தது. கோயிலுக்குள் செல்ல காவல் துறையினர் அனுமதி அளிக்காததால் வரசித்தி விநாயகர் கோயில் முன்பாக காவடி நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு சுவாமியை வணங்கிச் சென்றனர்.
ரத்தினகிரியில் ஆர்ப்பாட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு நேற்று காலை முதல் பக்தர்கள் சிலர் காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றனர். அவர்களை, கோயில் நுழைவு வளைவு பகுதியில் தடுத்து நிறுத்தினர். அவர்களை மலையடிவாரம் வரை செல்ல அனு மதிக்க வேண்டும் என கோரி இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர் களிடம், ரத்தினகிரி காவல் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனைத்தொடர்ந்து, மலையடி வாரத்தில் தடுப்புகள் இருந்த பகுதி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக் கப்பட்டனர். அங்கு முருகன் சிலை வைக்கப்பட்டு காவடி எடுத்து வந்தபக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுடன் மூலவருக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய் யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கைலாசகிரி உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி (இன்று) வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடி கிருத்திகை நாளான நேற்று முருகன் கோயில்கள் முன்பு தடுப்பு அமைத்து, பக்தர்களை உள்ளே அனுமதிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, வில்வாரணி மற்றும் சோமாசிபாடி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்துகோயில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி மூலவருக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்கள் எழுந்தருளினர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில்கள் வெறிச்சோடின.இதனால், கோயில் முன்பு காவடி களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT