Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

புதிய கருவிகள் கண்டுபிடித்து சாதனை - உலக அளவிலான தொழில்நுட்ப போட்டிக்கு சாகுபுரம் பள்ளி மாணவர்கள் தேர்வு :

தூத்துக்குடி

அமெரிக்காவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம், நீடித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு கொண்டுவரும் வகையில் 'யெசிஸ்ட் -12' எனும் தலைப்பில் உலக அளவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலம் மாணவ, மாணவியரின் படைப்புகளை காட்சிப்படுத்தி, அதில் சிறந்ததை தேர்வு செய்து ஊக்குவித்து வருகிறது. இதற்கான தகுதிச் சுற்று போட்டியை நடத்த சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்கட்ட தகுதி சுற்றுப் போட்டி கமலாவதி பள்ளியில் இணையதளம் மூலம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில், கமலாவதி பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பா.ஆட்லின் பிரீசியஸ் ஜோ பின் தயாரித்த புறஊதா கதிர்களைப் பயன்படுத்தி தானியங்கி சுத்திகரிப்பு மற்றும் உடலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் கருவி முதல் பரிசு பெற்றது.

இதே பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஏ.என். அபிஷேக் ராம் தயாரித்த இருசக்கர வாகனத்தை உரிமையாளரின் கைரேகை பதிந்தால் மட்டுமே இயக்கக்கூடிய பாதுகாப்பு கருவி 2-வது பரிசை பெற்றது. சென்னை அமிா்த வித்யாலயா பள்ளி மாணவர்கள் சஞ்செய், முகேஷ் குரு, பிரனார்த்திவரதன் தயாரித்த விவசாயிகளுக்கு உதவும் செல்போன் செயலி மற்றும் கமலாவதி பள்ளி மாணவர் ஹரிசுப்பிரமணியன் தயாரித்த முதியோர்களுக்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே பேன், லைட் ஆகியவற்றை செல்போன் மூலம் இயக்க உதவும் கருவிக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு பரிசுகளை பெற்றவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் எஸ்.அனுராதா, தலைமையாசிரியர் இ.ஸ்டீபன் பாலாசிர் முன்னிலை வகித்தனர். பள்ளி அறங்காவலர் டிசிடபிள்யூ நிறுவன தலைவர் முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஜி.னிவாசன், மூத்த பொது மேலாளர் (நிதி) பி.ராமச்சந்திரன், அடல் டிங்கரிங் ஆய்வக வழிகாட்டி நவநீதகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x