Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென் தமிழகத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆதிச்சநல்லூர் உள்ளது. இங்கு, தமிழக அரசின் தொல்லியல் துறைசார்பில் கடந்த ஆண்டு முதல்கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. தற்போது, இங்கும், சிவகளை மற்றும் கொற்கையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான பழங்கால பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்என்பது தொல்லியல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.
இதற்கான பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியது. மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு செய்தார். அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, மத்தியதொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி தலைமையிலான குழுவினர், கடந்த 18-ம் தேதி ஆய்வு செய்தனர். ``ஐரோப்பாவில் இருப்பதுபோல ஆன்-சைட் மியூசியம் எனப்படும் உலகத்தரம் வாய்ந்தஅருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படும்” என மகேஸ்வரி கூறினார்.
டெல்லியில் இருந்து மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அஜய் யாதவ் தலைமையில், இணை இயக்குநர் சஞ்சய் குமார்மஞ்சில், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், ஆதிச்சநல்லூரில் நேற்று முன்தினம் மாலையில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆதிச்சநல்லூரில் தற்காலிக அருங்காட்சியகம் அமைய உள்ள மண்டபம், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதி, புளியங்குளம் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் மாநில அரசு மூலமாக வைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி மற்றும் பொருட்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் விளக்கமளித்தார். தொடர்ந்து அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில், உதவி கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன், திருச்சி பராமரிப்பு அலுவலர் சங்கர், பராமரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, விக்னேஷ், ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், அரவாழி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT