Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை - தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆலோசனை

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் பேசினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பேராலயத்தின் 439-வது ஆண்டு பெருவிழா இன்று (ஜூலை 26) தொடங்குகிறது. கரோனா காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் வழக்கமாக நடைபெறும் நற்கருணை பவனி மற்றும் சப்பர பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பனிமய மாதா பேராலயம் அருகேயுள்ள ஸ்னோ ஹால் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை (இன்று) காலை 7 மணிக்கு நடைபெறும். இந்த ஆண்டு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்பவனி, சப்பர பவனி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏடிஎஸ்பி தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும். மற்ற நாட்களில் குறைந்த அளவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும். அனைத்து நிகழ்வுகளும் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேராலய பங்குத் தந்தை குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை விமல்சன், பங்கு பேரவை துணைத் தலைவர் ஹார்ட்லி, தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், காவல் ஆய்வாளர்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், அருள், ஜெயந்தி, வனிதா, அங்கையற்கண்ணி கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x