Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
திருவாரூர் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ், திருவாரூர் வாசன் நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் 3 ஆண்டுகள் முழு நேரப் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பஸ் கட்டணச் சலுகை மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்படுகிறது.
தற்போது, நிகழாண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சியும், நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும் போதுமானது.
ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.152 மட்டும் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, இசைப் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT