Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM

நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் : பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி

ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரமநாயகம் தலைமையில் நிர்வாகிகள், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவனை சந்தித்து அளித்த மனு விவரம்:

கரோனா காரணமாக தூத்துக்குடிக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது தூத்துக்குடி- சென்னை, தூத்துக்குடி- மைசூரு விரைவு ரயில்கள் மற்றும் தூத்துக்குடி-ஓகா வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி- கோவை இரவு நேர இணைப்பு ரயில், தூத்துக்குடி- சென்னை பகல்நேர இணைப்பு ரயில் (குருவாயூர் எக்ஸ்பிரஸ்) மற்றும் திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

தற்போது கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்துவிட்டதாலும், இதன் இணை ரயில்களான நாகர்கோவில்- கோவை இரவு நேர ரயில், சென்னை- குருவாயூர் பகல் நேர ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருவதாலும், தூத்துக்குடி- கோவை இரவு நேர இணைப்பு ரயிலையும், தூத்துக்குடி- சென்னை பகல் நேர இணைப்பு ரயிலையும் உடனடியாக இயக்க வேண்டும்.

திருநெல்வேலி- பாலக்காடு இரவு நேர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை சிறப்பு ரயில் காலை

7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி- மைசூரு ரயிலை மாலை 5.30 மணிக்கு புறப்படுமாறும், மைசூரு- தூத்துக்குடி ரயிலை காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடி வந்து சேருமாறும் பயண நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்மான்யா திலக்- மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x