Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - ஆட்சியர்கள் அலுவலக கட்டுமான பணிகள் : அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்கு சொந்த மான இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ.109.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை, தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ‘‘7 தளங் களுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் இடம் பெறும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக்கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கள், கழிவறை, செயற்கை நீருற்றுடன் கூடிய பூங்கா, கட்டிடத்தை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளம், மழைநீர் வடிகால் அமைப்பு அலங்கார மின்விளக்கு கள், முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ளன. கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்தஆண்டு ஜூலை 17-ம் தேதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 13.40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வரு கிறது. இதற்காக, ரூ.118.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மொத்தம் 4 தளத்தை கொண்டது. இங்கு வருவாய், ஊரக வளர்ச்சித்துறை என மொத்தம் 25 அரசு துறைகள் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட உள்ளன.

இப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிகழச்சியில், நாடாளு மன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), அண்ணா துரை(தி.மலை), எம்எல்ஏக்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வ நாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற் பொறியாளர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் புறவழிச்சாலை

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, " நெடுஞ் சாலைத்துறையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இது குறித்து ஆளுநரிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப் பட்டுள்ளது. அதேபோல பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலைகள் ஆய்வு செய்து வருகிறோம். அதில், தரமற்ற சாலைகள் அமைத்து இருந்தால் அந்த அதிகாரிகள் மீதும், ஒப்பந்த தாரர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2012-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை நெடுஞ்சாலைத்துறையிடம் கிடப்பில் உள்ளது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி பலமுறை சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தும் நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

திருப்பத்தூர் நகர மக்களின் நலன் கருதி விரைவாக புறவழிச் சாலை திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு புதிய மாவட்டத்தை முன்மாதிரியான மாவட்டமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வாணியம்பாடியில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவ லகம் மாவட்ட தலைநகரமான திருப் பத்தூருக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வாணியம் பாடியில் இருந்து சேலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகள் விரைவில் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x