Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் :

தஞ்சாவூர்/ திருவாரூர்/ திருச்சி

மேகேதாட்டுவில் கர்நாடக அரசுப் புதிய அணை கட்ட முயற்சி செய் வதைக் கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சோழபுரம், செங்கிப்பட்டி, பூதலூர், அல்லூர், வெள்ளாம்பெரம்பூர், நடுக்காவேரி உட்பட பல்வேறு இடங்களிலும் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதி செல்வன் தலைமையில் நடைபெற்ற உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் திருச்சி அமைப்பாளர் மூ.த.கவித்துவன் தலைமை வகித் தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத் துரை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தின் மாவட்டச் செயலாளர் வே.க.இலக்குவன், பொருளாளர் அ.ஆனந்தன், மாநகரச் செயலாளர் கே.ச.இனியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கர்நாடக முதல்வர் உருவ பொம் மையை எரிக்க முயன்ற 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x