Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் - 10 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு.

விருதுநகர்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பேசுகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், தற்போது 73 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 55 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள், 2 பேருக்கு தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தேய்ப்பு பெட்டிகள் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.11,13,244 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்துக்கு 20,346 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அதில் 10 ஆயிரம் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தற்போது தகுதியானவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 11 ஆயிரம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x