Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி - காங்கிரஸார் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் :

திருச்சி/ கும்பகோணம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரிய லூர் மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரங்கம் அம்மா மண்டபம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன், கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் முரளி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, காந்தி மார்க்கெட்- தஞ்சாவூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு மாவட்டத் தலைவர் ஜவஹர், மாநில பொதுக் குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்ளிட்டோரும், புள்ளம்பாடியில் உள்ள பெட்ரோல் பங்க் முன் தேசிய பொதுக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், வட்டாரத் தலைவர் அர்ச்சுணன் உள்ளிட்டோரும், புத்தாநத்தத்தில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜா முகம்மது, வட்டாரத் தலைவர் வடிவேல், அப்துல் சலாம் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தையும் காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரிகுளம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் மிர்சாவுதீன் முன்னிலை வகித்தார்.

விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், எஸ்சிஎஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்டச் செயலாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தவர்களிடம் மத்திய அரசுக்கு அனுப்புவதற்கான கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்றனர்.

இதேபோல, செட்டிமண்டபம் பெட்ரோல் பங்க் அருகே வட்டாரத் தலைவர் சசிகுமார் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

கரூர் மாவட்டத்தில் கரூரில் கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் நகரத் தலைவர் பெரியசாமி, லைட்ஹவுஸ் பெட்ரோல் பங்க் முன் மாவட்டப் பொருளாளர் மெய்ஞானமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, தாந்தோணிமலை, நரிகட்டியூர், வெள்ளியணை, உப்பிடமங்கலம், தென்னிலை, மாயனூர், சின்னசேங்கல், குளித்தலை, கம்மநல்லூர், சித்தலவாய் என மொத்தம் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தலைமை வகித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கீழப்பழுவூரில், வட்டாரத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் மாவட்டத் தலைவர் சங்கர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். திருமானூர் பெட்ரோல் பங்க் முன்பு வட்டாரத் தலைவர் சீமான், ஜெயங்கொண்டத்தில் நகரத் தலைவர் மணிகண்டன், செந்துறையில் மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனியம்மாள், அரியலூரில் நகரத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு தலைமையில், வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x