Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசு ஐடிஐயில் 2021- 2022-ம்ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம் என செங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வுக்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனியார் ஐடிஐக்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு இட ஒதுக்கீட்டில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கவும் விண்ணப்பங்களை இலவசமாக உரியஇணையத்தில் பதிவு செய்யவும் செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜூலை 28 வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9499055673. 99629 86696 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது செங்கல்பட்டு / பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் / துணை இயக்குநரையோ நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT