Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வுப் பணியும் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தொடங்கியது. சிவகளையில் இதுவரை ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் உட்பட மொத்தம் 40 தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பழங்கால கல்வட்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் தலைமையிலான குழுவினர் நேற்று சிவகளை வந்து, ஒரே குழியில்கிடைத்த 16 முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் முன்னிலையில் திறந்து, அவற்றின் உள்ளே இருந்தஎலும்புகள் மற்றும் மண்ணை பரிசோதனைக்காக சேகரித்தனர். இதுகுறித்து குமரேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு சார்பில்அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வுக்கான மரபணு சோதனைகளை செய்ய உதவி வருகிறது. மரபணு பரிசோதனைக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகத்தில் ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பணி மூன்று மாத காலத்தில் நிறைவடையும். அதன்பின்னர் மரபணு சோதனை இன்னும் சிறப்பாக நடைபெறும். சிவகளையில் 2 கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை இந்த ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்வோம். இப்பணி சுமார் 6 மாத காலத்தில் நிறைவடையும். ஆய்வு முடிவின் போது தமிழரின் நாகரீகம், பண்பாடுகுறித்து பல்வேறு சிறப்புகள் தெரிய வரும் என்றார்.
அகழாய்வு கள இயக்குநர்கள் பிராபகரன், தங்கதுரை, சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT