Published : 30 Jun 2021 03:16 AM
Last Updated : 30 Jun 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமங்கள் முன்னேற - திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் : அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா .

திருப்பத்தூர்

கிராமங்களை முன்னேற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வசதியான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். 6 கிராமங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கிராமத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

கிராமங்களில் மத்திய, மாநில அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தி கிராமங்களை வளர்ச்சியடைய வேண்டிய திட்ட அறிக்கையை தயாரிப்பது தொடர்பான அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசும் போது, “கிராம மக்களின் வாழ்க்கை, பொருளாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தான் கிராம வளர்ச்சித் திட்டம்.

இந்த திட்டத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு பஞ்சாயத்து வீதம் 6 கிராமங்களை தேர்வு செய்து அங்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பெரும்பான்மையான திட்டங்களை மக்களுக்கும், ஊராட்சிக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பல பணிகளை இணைத்து கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த முடியும். இத்திட்டத்தில் பல துறைகளின் திட்டங்களை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். ஊரக வளர்ச்சி, வேளாண், தோட்டக்கலை, கால்நடை, வனத்துறை, நீர்வளம், வருவாய்த்துறை உட்பட அனைத்து துறைகளில் உள்ள திட்டங்களை இங்கு செயல்படுத்த வேண்டும்.

இதற்காக, முதலில் 6 ஊராட்சிகளை தேர்வு செய்து, அங்கு நேரடியாக ஆய்வு செய்து மக்களின் தேவை, கிராமத்தின் தேவை குறித்து அறித்து அதற்காக திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

தனிநபர் முன்னேற்றம், குழு முன்னேற்றம், வருமான முன்னேற்றம், கிராமத்தின் கட்டமைப்பு மேம்படுத்துதல், சமூக முன்னேற்றம், கல்வி சுகாதார வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, விவசாய நிலம் மேம்பாடு, விவசாயத்தை பெருக்குதல், இயற்கையை பாதுகாத்தல், வேலை வாய்ப்பு மற்றும் சிறுதொழில், சுயதொழில் போன்றவற்றை உருவாக்கி அதன் மூலமாக கிராம ஊராட்சிகளை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லமுடியும். அனைத்து துறைகளும் இணைந்து கிராமத்தின் தேவையை அறிந்து திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் அடுத்த 4, 5 ஆண்டுகளில் கிராம ஊராட்சி கட்டாயமாக ஒரு முழுமை பெற்ற கிராமமாக மாறும். மக்களின் வாழ்வும் மேம்படும். எனவே, அனைவரும் இத்திட்டத்துக்கும் முழுமையாக ஆய்வு செய்து திட்ட அறிக்கையை வழங்கிட வேண்டும். அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

கூட்டத்தில் திட்ட இயக்குநர் மகேஷ், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x