Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

யோகா சிறப்பு பயிற்சியில் சிறுவர்கள் ஆர்வம் :

நாங்குநேரி கோகுலம் அகாடமி சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி நடைபெற்றது.(அடுத்தபடம்) திருநெல்வேலியில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சி. (கடைசிபடம்) 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போடுவதற்கு கோவில்பட்டியில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 7 வயது சிறுமி ரவீணா. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தூத்துக்குடி

திருநெல்வேலியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விவேகா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமுக்கு சங்க தலைவர் நாதன் தலைமை வகித்தார். செயலாளர் அழகேசராஜா பயிற்சி அளித்தார். அறக்கட்டளை தலைவர் அமல்தாமஸ் முன்னிலை வகித்தார். 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதுபோல மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் யோகாசன சங்கம் சார்பில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.

வள்ளியூர்

நாங்குநேரி பேரூராட்சி 4-வது வார்டு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், கோகுலம் அகாடமி சார்பில் சமூக இடைவெளியுடன் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மைய ஒருங்கிணைப்பாளர்கள் மு.அரிகரன், பெ.இசக்கிமுத்து ஆகியோர் உரையாற்றினர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உடல் நலனை பேணுவதற்கு தினமும் யோகாசனம் செய்வதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட வலியுறுத்தியும் 75 யோகாசனங்களை செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட நேரு யுகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சாய்தேவ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைலஜா கணேசன் தலைமை வகித்தார். டிஎஸ்பி கலைக்கதிரவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிறுமி வி.ரவீணா 75 யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், விஜயன், ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

இந்திய அரசு நேரு இளையோர் மையம், தூத்துக்குடி ஷைன் யோகா பவர் நிறுவனமும் இணைந்து நடத்திய 7-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. தொழில் அதிபர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டார். ஷைன் யோகா பவர் நிறுவனர் தனலெட்சுமி மற்றும் தலைவர் சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் சமூக இடைவெளியை கடைபிடித்து பல்வேறு ஆசனங்களை செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. வட்டக்கோட்டை கடற்கரையில் தொல்லியல்துறை அலுவலர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி நடைபெற்றது. கன்னியாகுமரி பஞ்சலிங்கபுரத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x