Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தக்காளி கூழ் தொழிற்சாலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் , பட்டு வளர்ச்சி மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் செயல்பாடு மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண், கால்நடை, தோட்டக் கலை, சர்க்கரை ஆலை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் வணிகத்துறை ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டம் குறித்த அறிக்கையை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அலுவலர்கள் பற்றாக் குறை இருந்தால் அது தொடர்பான அறிக்கையும் உடனடியாக எனது கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

வேளாண்மை துறையில் புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் வகையில் இம்மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், வேளாண் விளைப்பொருட்களை விளைவிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. எனவே, குறைந்த அளவிலான தண்ணீரை பயன் படுத்தி விவசாயம் செய்யவும், அதில் அதிக மகசூல் பெறுவதற் கான வழிமுறைகள் மற்றும் விழிப் புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தி அரசின் மானியம் மற்றும் கடன் உதவிகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

விவசாயத்துக்காக அரசு வழங்கி வரும் சலுகைகள், திட்டங்களை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வேளாண் சாகுபடி பரப்பளவை கால முறைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ள 6 ஒன்றியங்களில் ஒரு விவசாயியை தேர்வு செய்து, அதிகப்படியான விளைச்சலை பெரும் வகையில் அனைத்து விதமான நவீன வேளாண் செயல் முறை பயிற்சி வழங்கி இரட்டிப்பு உற்பத்தி செய்து லாபம் ஈட்டும் வகையில் அந்த விவசாயியை தயார் செய்ய வேண்டும்.

இதைபார்த்து மற்ற விவசாயிகளும் வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் வகையில் அவர்களையும் தயார் செய்ய வேண்டும். நவீன கருவிகளை விவசாயிகள் மானியத்துடன் பெற்றிட போதிய விழிப்புணர்வுக் கூட்டங்களை ஒவ்வொரு பகுதி யாக நடத்த வேண்டும்.

உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு போதிய பயிற்சி வழங்கி உற்பத்தி செய்யும் வேளாண் இடுபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறையை வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதை வேளாண்மை அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களில் விவசாயிகள் அதிகப்படியாக பயன்பெற வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய காய்கறி மற்றும் பழ வகைகளை விவ சாயிகள் நேரடியாக சந்தைப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். திருப்பத்தூர் மாவட் டத்தில் தக்காளி அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் இம்மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கேத்தாண்டப்பட்டி மற்றும் ஆம்பூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் எவ்வாறு செயல் படுகிறது என்பது குறித்தும், ஆலங்காயம் பகுதியில் உள்ள பட்டு உற்பத்தி தொழில் குறித்தும் அவ்வப்போது எனது கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடைதுறையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கால்நடைகளுக்கு கால அளவில் போடப்படும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் லாபம் பெறும் வகை யிலும், வேளாண் சாகுபடி பெருகும் வகையில் புதிய திட்டங்களை தெரிவித்து அந்த திட்டங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவாக செயல்படுத்த வேளாண்மை, கால்நடை, பட்டு வளர்ச்சி, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கி.ராஜசேகர், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், கால்நடை உதவி இயக்குநர் நாசர், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கயல்விழி, கரும்பு அபிவிருத்தி அலுவலர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x