Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞர் வெங்கடேசன், காணி நிலம் முனிசாமி, குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 நடுகற்களை ஆய்வுக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் எங்கள் ஆய்வுக்குழு வாயிலாக பல்வேறு வரலாற்று தடயங்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் ஏராளமான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், கல்திட்டைகள், நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஜவ்வாதுமலை யில் சமீபத்தில் கள ஆய்வு நடத்திய போது, புதூர் நாட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரும்பல்பட்டிக்கு செல்லும் வழியில் கங்கை நாச்சியம்மன் என்ற கோயில் எதிரேயுள்ள மரத்தடியில் கல்வெட்டு ஒன்று கண்டெடுத்தோம்.
இக்கல்வெட்டானது, புதூர் கிராமத்துக்கு தானமாக நிலம் கொடுத்த செய்தியை எடுத்துக் கூறுகிறது. இக்கல்வெட்டில் 3 தலைமுறைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தலை முறையினர் புதூர் நாட்டையோ அல்லது புதூர் நாட்டுக்கோ நிலத்தை தானமாக வழங்கியுள்ள செய்தி பதிவாகியுள்ளது. இக் கல்வெட்டானது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டாகும்.
2-வது கல்வெட்டு புதூர்நாட்டில் உள்ள சந்தைக்கு அருகேயுள்ள பிள்ளையார் கோயிலில் படுத்த நிலையில் கண்டெடுத்தோம். இந்த கல்வெட்டிலும் தானமாக வழங்கிய செய்தி முன்நிறுத்தப்பட்டுள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெங்கடபதி நாயக்கர் காலத்தில் நிலத்தை தானமாகவும் வரி (இறை) இல்லாமல் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. எந்த கோயில் என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
இக்கோயிலுக்கு உரிய நிலத்தை யாராவது தவறான முறையில் பயன்படுத்தினால் பசுவைக்கொன்ற பாவத்துக்கு ஆளாவார்கள் என இக்கல்வெட்டு கூறுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கற்கோடாரிகள் முதல் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலம் வரையிலான பல வரலாற்று தடயங்களை ஜவ்வாதுமலை தன்னகத்தே கொண்டுள்ளது. இது போன்ற பெருமைக்குரிய வரலாற்று தடயங்களை மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொல்லியல் துறை பாதுகாக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT