Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவில் மேலும் ஒரு எண்ணெய் கிணறுக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வலி யுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் மாநில கருத்தாளர் வ.சேதுராமன், மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நாடு முழுவதும் 75 இடங்களில் ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்து கைவிடப்பட்ட சிறு மற்றும் நடுத்தர எண்ணெய் கிணறுகளை ஏலத்தில் விடுவதற்கு கடந்த 10-ம் தேதி சர்வதேச ஒப்பந்தம் கோரியுள்ளது. இதில், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே யுள்ள வடத்தெரு பகுதியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதியும் அடங்கியுள்ளன.
காவிரி டெல்டா பகுதியை கடந்த ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததுடன், இந்தப் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், டெல்டா பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டத்தில் உள்ள நெடுவாசலுக்கு அருகே வடத்தெரு பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பவளப்பாறைகள் அதிகமுள்ள மன்னார் வளைகுடா பகுதியில், நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதி என ஏற்கெனவே ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி பெற்று, பின்னர் கைவிடப்பட்ட பகுதிகளை தற்போது ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சர்வதேச ஏலத்தில், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஹெல்ப் (Hydrocarbon Exploration Licensing Policy) கொள்கை அடிப்படையில், ஒற்றை அனுமதி என்ற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல், டைட் காஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அப்படி எடுக்கும்போது கையாளப்படும் பிராக்கிங் முறைகள் நிலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பகுதிகளை ஏலம் விடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார். அப்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் பொன்முடி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT