Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM
விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் 8 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ஏப்ரல் - மே மாதத்துக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்து, அதனை வரும் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்கள் இயங்காத நிலையில், வடமாநிலங்களுக்கு விற்ற துணிக்கு பணம் பெறாமல் உள்ளோம். மேலும், 50 சதவீதம் விசைத்தறியாளர்கள் கூலி அடிப்படையில் தொழில் செய்கின்றனர். இச்சூழலில், மின்கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என வலியுறுத்துவது வேதனையளிக்கிறது.
எனவே, ஊரடங்கு தளர்வு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, மின் கட்டணம் செலுத்த அவகாசம் தரவேண்டும். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT