Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க 2 வாரம் அமலில் இருந்த முழு ஊரடங்கு நேற்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அமலுக்கு வந்துள்ளது.
இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூர், செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், வெம்பாக்கம் மற்றும் ஜமுனா மரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மற்றும் எலெக்ட்ரிக்கல், ஹார்டுவேர் கடைகள் போன்றவை நேற்று திறக்கப்பட்டன.
கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இரு சக்கர வாகனங்களில் சென்று அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் சாலைகளில் மக்கள் கூட்டத்தை, 2 வாரத்துக்கு பிறகு காண முடிந்தது. வெளியே வந்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனை, பெரும்பாலான வியாபாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தவறாக எடுத்துக் கொண்டு அனைவரும் வெளியே வந்துவிட்டால், கரோனா தொற்று பரவலை தடுக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், நிலைமை மோசமடைந்துவிடும். எனவே, பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT