Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

கர்நாடகாவில் இருந்து மது கடத்தல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் 4 பேர் கைது :

தருமபுரி / கிருஷ்ணகிரி

கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்த 4 பேரை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் போலீஸார் கைது செய்தனர்.

நேற்று காலை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ குமார் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் அறிவழகன், அர்ச்சுணன் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூருவி லிருந்து வந்த சரக்கு வாகனத்தில் தக்காளி கூடை களுக்குள் மறைத்து கர்நாடகா மாநில மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து 13 பெட்டிகளில் 568 மதுபாட்டில்களையும், சரக்கு வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும்,வாகனத்தை ஓட்டி வந்த காவேரிப்பட்டணம், குண்டலப்பட்டியைச் சேர்ந்த அசோக் (22), காவப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

தருமபுரியில் 4323 பாட்டில் பறிமுதல்

பாலக்கோடு தக்காளி மண்டி அருகே பாலக்கோடு டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்று ஓசூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனையிட்டபோது 4230 கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தை ஓட்டி வந்த பாலக்கோட்டைச் சேர்ந்த நாகராஜ் (27), உடன் வந்த அஜித் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல, பாலக்கோடு வட்டம் மாரண்ட அள்ளி 4 ரோடு பகுதியில் அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். அதில், 93 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த மாரண்ட அள்ளி போலீஸார் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அஜய் (22), தேஜி நாயக் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x