Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

4,020 பைக்குகள் பறிமுதல் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமி காலனி, ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 120 பேருக்கு அரிசிப் பைகள் மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் வகையில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் கரோனா கால சிறப்பு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவி தேவைப்பட்டால் 9514144100 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை மையத்துக்கு இதுவரை உதவி கேட்டு 160 அழைப்புகள் வந்துள்ளன. உதவிகள் கேட்டஅனைவருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர். ஏடிஎஸ்பி கோபி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் போலீஸாரை வாரம்தோறும் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி வருகிறார். கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்டதாக தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், விளாத்திகுளம் ஆய்வாளர் ரமேஷ், குலசேகரன்பட்டினம் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சிவகுமார், முத்துகணேஷ், முறப்பநாடு உதவி ஆய்வாளர் ஜெய ராமசுப்பிரமணியன், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், குலசேகரன்பட்டினம் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி எஸ்பி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x