Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த இருவரின் உடலை அவர்களது உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், இருவரின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் விபத்து, கொலை, தற்கொலை போன்ற வழக்குகளில் தொடர்புடைய சடலங்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பிரேத பரிசோதனை அறையில் அந்த சடலங்கள் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்படும்.
தினசரி 5-க்கும் குறையாமல் இங்கே சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உரியவரின் உறவினர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது, கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களும் இங்கே வரத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சூளகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் உடல்நலக் குறைவால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். அவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவரது உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ளவில்லை.
இதனால், அந்த இரு சடலங்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்து பல நாட்கள் ஆன நிலையில் இவ்விரு சடலங்களும் தற்போது அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கி யுள்ளன. எனவே இறுதிச் சடங்குடன் அந்த உடல்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT