Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

ஈரோடு, ஓசூரில் வாகனங்களில் காய்கறி விற்பனை விலைப்பட்டியல் கட்டாயம் என அறிவுறுத்தல் :

ஈரோடு / ஓசூர்

ஈரோட்டில் மளிகை மற்றும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடியிருப்புப்பகுதிகளுக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்யும் பணியை ஈரோடு மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் 130 வாகனங்களில் காய்கறி, மளிகைப்பொருட்கள் விற்பனை தொடங்கிய நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

குடிருப்புப் பகுதிகளுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், 190 வாகனங்களில் காய்கறி விற்பனையும், 20 வாகனங்களில் மளிகை பொருட்களும், 40 வாகனங்களில் பழ விற்பனையும் செய்யப்படுகிறது. நடமாடும் வாகனங்களில், சந்தை விலைக்கே அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர்க்க அனைத்து வாகனங்களிலும் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

ஓசூரில் 90 வாகனங்கள்

ஓசூரில் உழவர்சந்தை மூடப்பட்டு வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 45 வார்டுகளிலும் தலா 2 வாகனம் என 90 வாகனங்களில் உழவர்சந்தை விலையில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஓசூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் சுமிதா கூறியதாவது:

ஓசூர் உழவர் சந்தை விவசாயிகள் 45 பேருக்கு வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் விலைக்கே காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும். அதைவிட அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் வாகன அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x