Published : 27 May 2021 03:12 AM
Last Updated : 27 May 2021 03:12 AM

கரோனா உயிரிழப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை : தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய டீன் உறுதி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய டீன் டி.நேரு. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகபணியாற்றி வந்த ரேவதி பாலன்சிவகங்கைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவத் துறை பேராசிரியர் டி.நேரு பதவி உயர்வுபெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படும். அனைவரது துணையுடன் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஏழை, எளிய மக்கள் அரசுமருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவி மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உதவி செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் ஏழை நோயாளிகளுக்கு 100 சதவீதம் சென்றடையும் என்று உறுதி அளிக்கிறேன். போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதியுள்ள அளவுக்கு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 2 நாட்களில் நுரையீரல் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது. இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசின் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கரோனா நோய்க்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கருப்பு பூஞ்சை நோய் இதுவரை தூத்துக்குடியில் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவருக்கு சந்தேகத்தின் பேரில் சதை மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில்தான் கருப்பு பூஞ்சை நோயா என்பது தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x