Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் - வீடுகளுக்கே வாகனங்களில் எடுத்து வந்து நேரடி விற்பனை : அரசு சார்பில் தினசரி விலை நிர்ணயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யும் பணிகளை தமிழக சமூகநலன்- மகளிர் உரிமைதுறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோனா பங்கேற்றனர்.

அமைச்சர் கூறும்போது, “ விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் காய்கறி விலை அரசு சார்பில் தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 76 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், மாளிகை பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனம் மூலம் வீடு வீடாகச் சென்று உணவு பொருட்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அனுமதி பெற கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை” என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 435 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், எம்எல்ஏ பழனி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ஆட்சியர் கூறியதாவது:

`மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மொத்தம் 85 நான்கு சக்கர வாகனங்கள், 350 இருசக்கர வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளது. காய்கறிகளை தொகுத்து ரூ.30, ரூ.60, ரூ.100 என்ற விலையில் தொகுப்பாகவும் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை பணியில் ஈடுபட்டுள்ள 650 பேருக்கும் கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதைதவிர்த்து பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்றார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 36 வார்டுகளுக்கும் சென்று காய்கறிகள் விற்பனை செய்ய 40 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x