Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி :

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினத்தை முன்னிட்டு, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி வடக்கு மாவட்டதிமுக சார்பில் கலைஞர் அரங்கில்நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் திருவுருவபடத்துக்கு கனிமொழி எம்.பி.,அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த 600 பேருக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பெ.சந்தனசேகர் தலைமையிலும், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் வழக்கறிஞர் அதிசய குமார் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் படத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மலர் தூவி, மெழுகுவத்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

அமமுக அமைப்புச் செயலாளர் ரா.ஹென்றி தாமஸ் தலைமையில் நினைவு ஜோதி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மதிமுகஅலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வே.வேல்ராஜ், மீனவ மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் கோல்டன் பரதர், தமிழகவாழ்வுரிமை கட்சி சார்பில் தெற்குமாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் ஜார்ஜ் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மாணவி ஸ்னோலின் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தலைமையில் திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் பண்டாரம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்குகளை திரும்ப பெற்றதற்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நகரும் காய்கறி கடை

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் யோகா பயிற்சியை கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தனர்.

ஸ்பிக் நிறுவனம் மூலம் முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலை, ஆட்சியரின் தன் விருப்ப நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை ஆட்சியர் கி.செந்தில்ராஜிடம் எம்.பி. வழங்கினார். மேலும், ஸ்பிக்நிறுவனம் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பில் 400 ஆக்சிஜன் ப்ளோ மீட்டர்களை ஆட்சியரிடம் நிறுவன முழுநேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், துறைத்தலைவர் (நிர்வாகம்) கோபாலகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழங்கினர். துத்துக்குடியில் நடமாடும் காய்கறி சந்தையை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

“மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று காய்கறி, மீன், இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதற்காக 9,262 மகளிர் சுயஉதவி குழுக்களை பயன்படுத்த உள்ளோம்” என எம்.பி. தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x