Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

கரோனா தொற்று பாதித்த : கடலாடி சிறப்பு எஸ்.ஐ. மரணம் :

கடலாடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ. மணிகண்டன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்.

ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம், ரெட்டியாபட்டி அருகே புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (58). இவர் 1984-ல் காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றார். இவருக்கு 16-ம் தேதி கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து நேற்று முன்தினம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி போலீஸ் மரியாதையுடன் மணிகண்டன் உடல் சொந்த ஊரான புதூரில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவி, பாண்டியராஜன், கணேஷ்குமார் ஆகிய இரு மகன்கள், விஜயலெட்சுமி என்ற மகள் உள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் பணியாற்றிய கடலாடி காவல் நிலையத்தில் அவரது உருவப்படத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, கடலாடி இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்.ஐ.கள் கார்த்திகைராஜா, கருப்புசாமி உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் 72 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சிகிச்சை பெறச் சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x