Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிறைந்துவிட்டதால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்ற குழப்பத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா வழிகாட்டி மையம் அமைக்க வேண்டும். அல்லது வழிகாட்டு விளம்பரப் பலகைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "தற்போதுபுதிதாக ஏராளமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்றுக்கு உள்ளாவோருக்கு, மருத்துவமனைகள் மற்றும் கரோனா கேர் சென்டர்களில் உள்ள காலி படுக்கைகளின் விவரம், நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய வசதிகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். தொற்று உறுதியானவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் உள்ளிட்ட தகவல்களைப் பெறும் வகையில் கரோனா வழிகாட்டி மையம் அல்லது வழிகாட்டு விளம்பரப் பலகைகள் அமைக்க வேண்டும். அதில், தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, சேர்க்கைக்கான முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT