Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.103.35 கோடி மதிப்பில் கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் ஊராட்சி ரேஷன் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் முன்னிலை வகித்தார். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள் ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக இயங்கி வரும் 1,058 ரேஷன் கடைகள் மூலம் 4,79,951 அரிசி குடும்ப அட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 36 ரேஷன் கடைகள் மூலம் 36,458 அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் 320 இலங்கை தமிழர்கள் என மொத்தம் 5,16,729 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,094 ரேஷன் கடைகள் மூலம் ரூ.103.35 கோடி கரோனா நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.
எனவே மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று கரோனா நிவாரண உதவித்தொகை பெற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழுத் தலைவர் கவிதா கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சந்தானம் வரவேற்றார். பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT